லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ என அவ்வப்போது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருந்த நிலையில், கடந்த சில தினங்களாகப் படத்தின் போஸ்டர்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் ஒவ்வொரு மொழியின் போஸ்டர்களை வெளியிட்டு வந்தது.
அந்த வகையில் தெலுங்கு, கன்னட போஸ்டர்களை அடுத்து தற்போது தமிழ் மொழியின் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் விஜய் கத்தியைப் பட்டைத் தீட்டுவது போல் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தி போஸ்டர் வெளியாகியுள்ளது.போஸ்டரில் விஜய் மற்றும் சஞ்சய் தத் இடம்பெற்றுள்ளனர். விஜய், கொலைவெறியுடன் சஞ்சய்தத்தின் கழுத்தை நெரித்து அடிப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் எதிரியை எதிர்கொள்ளுங்கள் என்ற நோக்கில் ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.