
விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Ente Aniyathimaar , aniyanmaar, chettanmaar, chechimaar ammamaar!
Ella Malayalikalkkum ente Hridayam Niranja Nanni 🤗 pic.twitter.com/axmw72aOls— Vijay (@actorvijay) March 22, 2024