vijay donate products and money to people

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். மேலும் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள்.

Advertisment

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisment

இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடக்கிறது. அதில் கிட்டதட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25000 என விஜய் வழங்குகிறார். இதில் தூத்துக்குடி மாநகர பகுதியை சார்ந்த 500 பேர், புறநகரை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என பல்வேறு தரப்பில் பாதிக்கப்பட்டவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார். அதே போல் நெல்லை மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 400 பேரை தேர்வு செய்துள்ளனர்.

இதில் தூத்துக்குடியை சேர்ந்த ராபின்சன் என்பவர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெனரேட்டரை இயக்கும் பொழுது உயிரிழந்ததாக தெரியவந்தது. அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறார். 1500 குடும்பங்களுக்கு அங்கேயே சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisment