
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் ரெட்ரோ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல் அறிவை பயன்படுத்தாமல் சண்டை போடுகிறார்கள் எனக் கூறியிருந்தார்.
அவர் பேசியது சர்ச்சையான நிலையில் தெலுங்கானா பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பழங்குடியினர் குறித்து இழிவான கருத்துகளை விஜய் தேவரகொண்டா தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, “பழங்குடியின சமூகத்தை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களை புண்படுத்துவது எனது நோக்கமில்லை. நான் ரெட்ரோ பட விழாவில் பழங்குடியின என்ற வார்த்தையை பயன்படுத்தியது வரலாற்று அகராதியில் இருக்கும் அர்த்தத்தை குறிக்கும் நோக்கில்தான். அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதக்குலம் குழுக்களாக இருந்த போது பெரும்பாலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் அகராதியில் கூறுகின்றனர். இதை குறிப்பிட்டு பேசியிருந்தேனே தவிற காலனித்துவத்துக்கு பிறகு உருவான இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியின சமூகத்தை பற்றி நான் பேசவில்லை. இருப்பினும் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அல்லது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நோக்கம் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுவதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
To my dear brothers ❤️ pic.twitter.com/QBGQGOjJBL— Vijay Deverakonda (@TheDeverakonda) May 3, 2025