தொழிலதிபர் ஃபனீந்திர சர்மா என்பவர் திரை பிரபலங்கள், சோசியல் மீடியா பிரபலங்கள் ஆகியோர் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதாக புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்ளிட்ட 29 நபர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரகாஷ் ராஜ், ரானா டகுபதி தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்திருந்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 27 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்பு சம்பந்தப்பட்ட நபர்களின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்பு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. அதன்படி ராணா டகுபதி ஜூலை 23ஆம் தேதியும் பிரகாஷ் ராஜ் 30ஆம் தேதியும் விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6ஆம்(இன்று) தேதியும் நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராணா டகுபதி ஆஜராகவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மாதம் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளார். பின்பு பிரகாஷ் ராஜ் சொன்ன தேதியில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.