இந்தியா சுதந்திரம் பெற்றதை முன்னிட்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளாக அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த ‘இந்தியா தின அணிவகுப்பு’ வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவை சார்ந்த திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இந்த அணிவகுப்பில் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன், சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்தாண்டு நடந்த 43வது இந்தியா தின அணிவகுப்பில், விஜய் தேவரக்கொண்டா மற்றும் ராஷ்மிகாவும் கலந்து கொண்டுள்ளனர். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இருவரும் பொதுவெளியில் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சூழலில் அணிவகுப்பில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளது அவர்களது காதலை உறுதிபடுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் கை கோர்த்து கலந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 17ஆம் தேதி நியூ-யார்க்கில் மன்ஹாட்டன் தெருக்களில் நடந்துள்ளது.
அணிவகுப்பை முடித்து கொண்டு அதே நியூ-யார்க்கில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் இருவரும் அன்போடு ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இருவரும் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. பின்பு 2019ஆம் ஆண்டு வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு இருவரும், சிங்கிள் இல்லை என தெரிவித்தனர். ஆனால் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை. விஜய் தேவரகொண்டா, கடைசியாக கிங்டம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ரவி கிரண் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதே சமயம் ராஷ்மிகா, கடைசியாக தனுஷுடன் குபேரா படத்தில் நடித்திருந்தார். இப்போது தி கேர்ள் ஃபிரண்ட், மைசா, தமா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.