கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’.  இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்குகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டீசர் வெளியான நிலையில் அதில் தமிழ் பதிப்பிற்கு சூர்யா பின்னணி குரல் கொடுத்திருந்தார். இதை முன்னிட்டு, விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

விழாவில் விஜய் தேவராகொண்டா பேசியதாவது, “ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.

இந்தப் படம்  உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று , அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான ப்ரொமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து ப்ரொமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் . சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. ‘நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்… இல்லன்னா பரவாயில்லை’ என்று தயங்கி கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கே முன்பே உருவானது.

அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். நேற்று ப்ரீ-ரிலீஸ் இவெண்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், இன்று சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதி பணிகளை பார்வையிடுகிறார். நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை எல்லோரும் நம்ப மாட்டாங்க, ஆனா அனிருத் சொன்னா நம்புவாங்க. அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கு” என்றார்.

Advertisment