/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/469_15.jpg)
காஷ்மீரில் ‘மினி சுவிட்ஸர்லாந்து’ என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மஞ்சு வாரியர், ரவி மோகன், ஆண்ட்ரியா, ஜி.வி.பிரகாஷ், சூர்யா, காஜல் அகர்வால், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர். இதன் வரிசையில் தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பயங்கரவாதிகளுக்கும் கல்வி கற்று கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, “காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு, பயங்கரவாதிகளுக்கு கல்வி கற்று கொடுப்பதும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதை தடுப்பதுமே ஆகும். காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. அங்குள்ளவர்கள் இந்தியர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் நடித்த குஷி பட படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த குடியிருப்பு வாசிகளுடன் பழகியது இப்போதும் அழகான நினைவுகளாக இருக்கிறது.
பாகிஸ்தானால் தங்கள் சொந்த மக்களைக் கூட கவனித்துக் கொள்ள முடியாது. அவர்களிடம் சரியான மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடையாது. அவர்கள் இங்கே என்ன செய்ய விரும்புகிறார்கள்? இந்தியா பாகிஸ்தானை தாக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பாகிஸ்தான் மக்களே அந்நாட்டு அரசாங்கத்தால் சலிப்படைந்து விட்டார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மக்களே அரசாங்கத்தை தாக்குவார்கள். பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் எவ்வாறு சண்டையிடுவார்களோ அது போல் நடந்து கொள்கிறார்கள். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க வேண்டும். முன்னோக்கி நகர வேண்டும். அதற்கு கல்வி ஒரு முக்கிய கருவி. நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம். நம் பெற்றோர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம். அப்போதுதான் நாம் முன்னேர முடியும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)