vijay

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் அவார்ட்ஸ் மீண்டும் கோலாகலமாக நேற்று அரங்கேறியது. 10வது வருடத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த விருது விழா கடந்த மே 26ஆம் தேதி நடக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக விழாவை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி நேற்று நடந்த இவ்விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில்எதிர்ப்பாராத விதமாக பெரிய நட்சத்திரங்கள் பலரும் வரவில்லை.மேலும், இதில் சில விருதுகள் வழங்குவதை விழாக்குழுவினர் தவிர்த்தனர். சிறந்த படக்குழு, பேவரிட் நடிகர், சிறந்த ஸ்டண்ட், செவாலியே சிவாஜி விருது, சிறந்த மேக்கப், சிறந்த கலை இயக்குனர், சிறந்த பாடல், போன்ற விருதுகள் வழங்கப்படவில்லை. அதிலும் விஜய்க்கு தரப்பட வேண்டிய பேவரிட் நடிகர் விருதையும் நேற்று கொடுக்கவில்லை.

Advertisment

நடிகர் விஜய்க்கு இன்று படப்பிடிப்பு உள்ள காரணத்தால் அவர் நேற்று விழாவிற்கு வரவில்லை. அதனால் விஜய் சார்பாக விருது வாங்க அவருடைய அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விழாவிற்கு வந்தார். விழாவைத் தொடங்க விழாக்குழுவினர் வெகு நேரம் எடுத்து கொண்டதால், எஸ்.ஏ.சி அங்கிருந்து கிளம்பிவிட்டார். இருந்தும் விஜய்க்கு தரவேண்டிய பேவரிட் நடிகர் விருதை விழாவில் அறிவித்து அதை யாரிடமாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில்அவருக்குத் தரப்பட வேண்டிய 'ஃபேவரிட் நடிகர்'விருதை அவரது இல்லத்துக்குச் சென்று கொடுத்து அதை தொலைக்காட்சியில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.