அப்புக்குட்டி, தம் பி ராமையா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாதும் அறியான்’. பிரேக்கிங் பாய்ண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை எம்.கோபி இயக்கியுள்ளார். மிஸ்ட்ரி சைக்காலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தர்மா பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 8ஆம் தேதி வெளியானது. ட்ரெய்லரை பார்க்கையில் 2024ஆம் ஆண்டு கதை ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற்போல் அந்தாண்டு விஜய்யின் த.வெ.க. கட்சி நடத்திய முதல் மாநாடு குறித்த செய்தி போஸ்டர் இடம்பெறுகிறது. பின்பு இரண்டு ஜோடிகள் ஒரு ரெசார்ட்டுக்கு செல்லும் படி, பின்பு ஒரு கொலை நடப்பது போன்ற காட்சிகளுடன் கதை விரிகிறது. அடுத்து அந்த கொலை எப்படி நடந்தது, யார் செய்தார் என்பதை நோக்கி ட்ரெய்லர் நகர்கிறது. 

இறுதியில் கொலை செய்ததாக காட்டப்படும் ஒரு கேரக்டர், போனில் ஒருவருடன் பதட்டத்துடன் பேசுகிறார். அப்போது கேலண்டரில் எந்த வருஷம் எனக் கேட்க 2026 என பதில் வருகிறது. உடனே 2026ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெளியான ஒரு செய்தி தாளின் போஸ்டர் காட்டப்படுகிறது. அதில் த.வெ.க. விஜய் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருவது போல் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.