
விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விஜய் ஆண்டனியின் ஹீரோ பயணத்தில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது பிச்சைக்காரன். இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று ப்ளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'பிச்சைக்காரன் 2' படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இயக்குநர் சுசீந்திரனும் "விஜய் ஆண்டனி சென்னையில் அவரு வீட்டில் இருக்காரு. இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் சொல்லிருக்காங்க. கூடிய சீக்கிரம் ரசிகர்கள்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு. ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அவரை பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது தனது உடல் நலம் குறித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தால் தாடை மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இப்போது அந்த காயத்தில் இருந்து பத்திரமாக மீண்டுள்ளேன். ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலையில் அக்கறை காட்டி ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.