
கௌசல்யா ராணி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வெளியான படம் 'தமிழரசன்'. இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர் மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இதில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 16ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “விஜய் ஆண்டனி மற்றும் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்கள் என் கருத்துரு மேல் நம்பிக்கை கொண்டு தங்கள் அனைத்து திறமையையும் வெளிக்காட்டினர்” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை இயக்குநர் இதில் இணைத்துள்ளார். மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும் இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை” என்றார்.