Vijay Antony

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாட படக்குழு சார்பில் வெற்றிவிழா ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, "இப்போது என்னவாக இருக்கிறேனோ அதற்கான முழு தகுதி எனக்கு கிடையாது. பள்ளி, கல்லூரியில் ஒழுங்காக படிக்க மாட்டேன். ஆனால், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை. சாதாரண ஏழை மக்களுக்கு கலெக்டராக வேண்டும்... டாக்டராக வேண்டும்... இன்ஜினியராக வேண்டும் என்றுதான் கனவில் தோன்றும். டாக்டர், இன்ஜீனியர் ஆக வேண்டுமென்றால் படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டும். எனவே என் அம்மாவை ஏமாற்றுவதற்காக நான் சினிமாவுக்குப் போகப்போகிறேன் என்று சொல்லிவந்தேன். நாட்கள் செல்லச் செல்ல ரொம்ப நம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தேன். ஆனால், எனக்கு முறையான நடிப்பு, இசை என எதுவுமே தெரியாது. மூடநம்பிக்கையுடன் அந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லி இப்போது உங்கள் முன்னால் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அம்மாவின் புண்ணியம்தான் என்னை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

Advertisment

உண்மையில் இன்றைய நாயகன் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்தான். எப்போதுமே ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் நாயகன் இயக்குநர்தான். சினிமாவுக்குக் கதை எழுதுவது என்பது ஒரு கருவைச் சுமப்பது மாதிரி. 'பிச்சைக்காரன்' கதையை என்னிடம் சொன்னபோது இயக்குநர் சசி அழுதார். அப்படியென்றால் எழுதும்போது எப்படி அழுதிருப்பார். இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் ஜெயித்ததில் மகிழ்ச்சி. அட்லி, லோகேஷ் கனகராஜ் மாதிரி விஜய், அஜித்தை வைத்து வெற்றிகரமான படங்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான அத்தனை தகுதிகளும் ஆனந்த கிருஷ்ணனுக்கு உண்டு" எனக் கூறினார்.