விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ள படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரித்து இசையமைத்தும் உள்ளார். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஜய் ஆண்டனி பேசுகையில், “நான் அருண் பிரபுவுடன் வேலை செய்வேன் என தெரியாமலையே நிறைய இடங்களில் எனக்கு பிடித்த படம் அருவி என சொல்லியிருக்கேன். ஒரு நாள் அருண் பிரபுவிடம் இருந்து உங்களுடன் படம் பண்ண வேண்டும் என்று மெசேஜ் வந்தது. முன்னதாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் படம் பண்ணவிருந்தார். அதனால் விஜய தேவரகொண்டாவுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை எனக்கு அனுப்பிவிட்டரோ என நினைத்தேன்.
அருண் பிரபு கதை சொல்வதற்கு முன்பே அவருடன் படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். ஆனால் கதை கேட்ட பிறகு பெரிய பட்ஜெட் படம் என தெரிந்தது. நான் மீடியம் பட்ஜெட் படம் பண்ணியே பழகிவிட்டேன். இருந்தாலும் அருணுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. ஃபர்ஸ்ட் ஆஃப் கதை கேட்டேன், பயங்கரமா இருந்துச்சு. செகண்ட் ஆஃப் கதை கேட்டேன் எனக்கு ஒன்னுமே புரியவில்லை. ஏன்னா, முழுக்க முழுக்க அரசியல். வசனங்கள் எல்லாம் தெறிக்குது. அரசியல் பொறுத்தவரை எனக்கு பெரியளவு அறிவு கிடையாது. இருந்தாலும் அருவி படத்தில் மக்களுக்கான அரசியலை அருண் பேசியிருந்ததால் நானும் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
பின்பு என் நண்பர்கள் படம் பார்த்தார்கள். அவர்களிடம் அருண் எதாவது குறியீடு வைத்திருக்கிறாரா என கேட்டேன். குறியீடு எல்லாம் இல்லை, நேரடியாகவே சொல்லியிருக்கார்... உங்க நிலைமை என்ன ஆகுமோ என சொன்னார்கள். என்னதான் இருந்தாலும் இப்படம் ஒரு கலை வடிவத்திற்குள் இருக்கிறது. அதனால் படமாக மட்டும் தான் பார்ப்பார்கள். என்னுடைய கரியரில் மிகவும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று” என்றார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதற்காக விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் - ஆக இருந்த அவரது நிறுவனம் 2027 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற உள்ளதாக அறிவித்தார். பின்பு அவரிடம் படத்தில் சொல்லப்பட்ட நியோ பொலிட்டிக்கல் ஜானர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதுவரைக்கும் நீங்க பார்த்த அரசியல் படங்களில் ரொம்ப செயற்கைத்தனம் இருக்கும். ஆனால் இப்படம் ரொம்ப எதார்த்தமாக இருக்கும். மக்களின் அரசியலை பேசும்.
எனக்கு தெரிஞ்ச அரசியல் ஏழை, பணக்காரன். அவங்களுக்குள் பெரிய வேறுபாடு இருக்கும். அது என்னுடைய படங்களில் தொடர்ச்சியாக பேசி வருகிறேன். ஆனால் சாதி, மத அரசியல் எனக்கு தெரியாது. அருண் பிரபு படங்களிலும் என்னுடைய அரசியலை மறைமுகமாக சொல்வது போல் இருக்கும். அதோடு மக்கள் சார்ந்த பிரச்சனைகளை தைரியமாக எதார்த்தமாக பேசுவதால் அவர் நியோ பொலிட்டிக்கல் என சொல்கிறார்” என்றார்.