Skip to main content

சிங்கிள்ஸுக்காக ஒரு சிங்கிள்! வருகிறது 'ஸ்டைலச்சியே தமிழச்சியே...'

'முரட்டு சிங்கிள்', 'ஆல்வேஸ் சிங்கிள்', 'சிங்கள் ஃபாரெவர்'... என 'சிங்கிள்'தன்மையை கொண்டாடும் காலம் இது. வெளியில் கொண்டாட்டமாக இருந்தாலும் மனதிற்குள் 'ல்தகா சைஆ', அதுதான் 'காதல் ஆசை' இல்லாமலா போகும்? மனதிற்குள் காதல் ஆசை, வெளியில் சிங்கிள் கெத்து என்று சுற்றும் இளைஞர்கள் கொண்டாடும் வண்ணம் ஒரு பாட்டுடன் வந்திருக்கிறது இசையமைப்பாளர் அருள்தேவ் அண்ட் டீம். 

 

daHDV

 

"திரைப்பட பாடல்கள் அல்லாத தனியிசை ஆல்பம் பாடல்கள் மீது மதுரையை சேர்ந்த தொண்ணூறுகளில் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு கிட்டத்தட்ட கிறுக்கு எனப்படும் அளவுக்கு மோகம் உண்டு. ஆங்கில பாடகர்களின் தனியிசை ஆல்பம் இந்தியில் அலிஷா ஷெனாய், லக்கி அலி, கொலோனியல் கசின்ஸ் என்று இந்த பட்டியல் நீளும். அப்போதே இந்த ஆல்பம் அடங்கிய கேசட் விலை அதிகம். அறுபது ரூபாயில் இருந்து நூறு ரூபாய் வரை வரும். சிடிக்கள் அப்போது பணக்கார வீடுகளில் மட்டுமே இருக்கும். தமிழில் அப்படி தரமான தனியிசை பாடல்கள் வரவேண்டும் அதை ஒருநாள் நாம் படமாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு நெடுநாட்களாக உண்டு" என்று விறுவிறுவென ஒரு சின்ன ஹிஸ்ட்ரியே சொல்கிறார் பாடலுக்கான கான்செப்ட்டை உருவாக்கிய விஜய் மகேந்திரன்.

 

 

13.11.19 அன்று லிரிக்கல் வீடியோவாக வெளிவர இருக்கும் இந்தப் பாடலுக்கான வீடியோவை இயக்கும் இவர் ஒரு எழுத்தாளர். இவருடைய சிறுகதை தொகுப்பான 'நகரத்திற்கு வெளியே' இலக்கியத்தளத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து இவர் எழுதிய 'ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம்' என்ற புத்தகம் பல பதிப்புகளை கண்டுவிட்டது. 

 

ZC

 

இசையமைத்துப் பாடியுள்ள அருள்தேவ், 'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பீ' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர், தென்னிந்தியா முழுவதும் பறந்து பறந்து வேலை செய்பவர். மரகதமணி, வித்யாசாகர், மிக்கி ஜே மேயர் என பல இசையமைப்பாளர்களின் ஃபேவரிட் கீ-போர்ட் பிளேயர், ப்ரோக்ராமர் இவர். பாகுபலி-2, நடிகையர் திலகம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'பூவரசம் பீப்பீ' படத்தில் இவரது பாடல்கள் பால்ய காலத்தின் வெப்பத்தை நமக்கு சுகமாகத் தந்தவை. இப்போது 2K கிட்ஸின் டேஸ்டுக்கு செம்ம மாடர்னாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். 

 

vdvd

 

’DPயா உன்ன வச்சு, பீ...பீ...பீ... மேளமடிச்சு, statusa மாத்தணுமே...' என சிங்கிள்ஸின் வாட்டத்தையும் 'ஆயிரம் ஆப்ஷன் எனக்கிருக்கு எனக்கெதுக்கிந்த அரை கிறுக்கு, காதல் எல்லாம் outdated இப்ப நாங்கதான்டா updated' என நியூ வேவ் கேர்ள்ஸின் மன ஓட்டத்தையும் ஜாலியாக காலி செய்திருக்கிறார் பாடலாசிரியர் வசந்த். 'டிவோ மூவீஸ்' நிறுவனத்தின் இந்தப் பாடலை 13-11-2019 அன்று சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார் விஜய் ஆண்டனி. 'இன்டிபெண்டென்ட் மியூசிக்' எனப்படும் தனியிசை பாடல்களுக்கான இடம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. 'கிளப்புல மப்புல', 'முட்டு முட்டு', 'உரசாத' போன்ற பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி பெரிய வெற்றியை பெற்றன. அந்த வரிசையில் 'ஸ்டைலச்சியே...' இணைய வாழ்த்துகள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்