Skip to main content

"வாழ்க்கை எவ்ளோ வலி நிறைந்தது என்று எனக்கு தெரியும்" - வைரலாகும் விஜய் ஆண்டனி பேச்சு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

vijay antony old speech viral on social media

 

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா (வயது 16) சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவம் சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி, தனது தந்தையும் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தனிப்பட்ட வாழ்கை குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

அந்த வீடியோவில் விஜய் ஆண்டனி பேசியது, "வாழ்க்கையில் எவ்ளோ பெரிய துன்பம் வந்தாலும் என்ன கஷ்டம் வந்தாலும் தற்கொலை மட்டும் செய்யக்கூடாது. என்னுடைய தந்தையும் தற்கொலை செய்தவர் தான். அப்போது எனக்கு 7 வயசு. என் தங்கச்சிக்கு 5 வயசு. தற்கொலைக்கு என்ன காரணம் என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது மற்றவர்களுக்கு பெரிய விஷயமும் கிடையாது. அந்த தற்கொலைக்கு பின்பு என்னுடைய அம்மா, இரண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டாங்க என்பது, எனக்கு தெரியும். அந்த வலி எனக்கு புரியும். நான் அமைதியா இருக்கேன், அழுத்தமா இருக்கேன், சில விஷயங்களை கவனிச்சிக்கிட்டு இருக்கேன், நிறைய பேசமாட்டேன்... ஏனென்றால் நான் நிறைய விஷயங்களை பாத்துட்டேன். எனக்கு தெரியாத விஷயங்கள் கிடையாது. வாழ்க்கை எவ்ளோ வலி நிறைந்தது என்று எனக்கு தெரியும். பேசத்தெரியாமல் அமைதியா இல்லை. பேச தெரியும். 

 

ஒரு ரஹ்மான் மாதிரி, அனிருத் மாதிரி நான் ஒரு பெரிய மியூசிக் டைரக்டர் கிடையாது. திரைத்துறையில் ஒரு ஓரத்தில் ஒரு சாதாரண ஒரு ஆள். நிறைய தோல்வி படம் கொடுத்த விஜய் ஆண்டனி. நான் ஒரு பண்பான மனிதர் என்று நினைக்கலாம். எனக்கும் ஒரு மாசத்துல பத்து தடவை கோபம் வரும். அந்த கோவத்தை மட்டும் படம் பிடிச்சு நீங்க போட்டீங்கன்னா, விஜய் ஆண்டனி கோபப்பட்டாரு, அடிச்சிட்டாரு, கொன்னுட்டாரு என அதையும் பெரிசாக்கி என்னுடைய இமேஜை காலி பண்ணலாம். மனுஷங்க எல்லாருக்குமே கோவம் வரும். நாம் யாரென்று எல்லாருக்குமே தெரியும். நம்மில் எத்தனை பேர் உத்தமன் சொல்லி கை தூக்க முடியும். நாம் எல்லாருமே மனுஷங்க தான் அதில் கெட்டதும் இருக்கு. நல்லதும் இருக்கு" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்