
கரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. செப்டம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும், முன்னணி நாயகர்களின் படங்கள் எதுவுமே இன்னும் தொடங்கப்படவில்லை.
இன்னும் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எனப் பலருக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஓடிடி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் படபிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. இதுகுறித்து நேற்று அவர் ட்விட்டரில் தெரிவிக்கையில், “என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்து கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும், FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என்று தெரிவித்துள்ளார்.