/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/465_14.jpg)
காஷ்மீரில் ‘மினி சுவிட்ஸர்லாந்து’ என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி, “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய் ஆண்டனி பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “என் பதிலை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு. காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்” என தெரிவித்துள்ளார்.
— vijayantony (@vijayantony) April 28, 2025
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)