சமீப காலங்களாக சினிமா வட்டாரத்தில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கள் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான இவர் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற இசை ஆல்பத்தை பாடி நடித்திருந்தார். இவை இரண்டும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவரா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானார். பின்பு சூர்யாவின் கருப்பு, சிம்புவின் 49வது படம், கார்த்தியின் மார்ஷல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் என அடுத்தடுத்து கமிட்டானார். அதோடு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் அட்லீ - அல்லு அர்ஜூன் கூட்டணியின் உருவாகும் இன்னும் பெயரிடாத படத்திலும் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. அதாவது இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் வரிசையாக படங்கள் கமிட்டாவது எப்படி? நிறைய பேர் திறமையானவர்கள் இருந்தும் எப்படி அவருக்கு வாய்ப்பு வருகிறது? அப்பா - அம்மா பாடகர்கள் என்பதாலா என ஏகப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டது. 

இதனிடையே சாம் சி.எஸ் நிறைய படங்களுக்கு வேலை செய்தும் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் பேச்சுகள் எழுந்தது. மேலும் இது போன்ற பேச்சுகளை சாம் சி.எஸ்ஸே தனது பி.ஆர்.டீம் மூலம் கிளப்பிவிடுகிறார் என்ற பேச்சுகளும் வலம் வந்தது. ஆனால் இதை முற்றிலுமாக சாம் சி.எஸ். மறுத்திருந்தார். இந்த விஷயங்கள் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து இருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “இரண்டு பேருமே திறமைசாலிகள் தான். லேட்டாக வந்தாலும் அவர் ஒரு நல்ல இடத்தில் இருக்கார். சிறிய இடைவெளியில் வந்தாலும் அவரும் நல்ல இடத்தில் இருக்கார். இதை வரவேற்கத் தான் வேண்டும். ஏன் தப்பா பார்க்கனும். அப்படி பார்க்க வேண்டாம். மியூசிக்கே தெரியாம நான்லாம் மியூசிக் டைரக்டராகவில்லையா. இதெல்லாம் அநியாயம் தானே. இப்படி இருக்கும் போது அவங்க ஏன் வரக்கூடாது. திறமை இல்லாமல் யாருமே நிலைத்து நிற்க முடியாது” என்றார்.