
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனால், படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் ஆண்டனியிடம், விஜய் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர முடிவெடுத்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “சினிமாவில் சின்ன வயதிலிருந்தே அவர் நடிக்கிறார். 17 வயதிலிருந்தே ஒரே வேலையை பார்க்கிறார். அதில் உச்சமும் தொட்டுவிட்டார். அதனால் அன்பு கொடுத்த மக்களுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க போகிறார். அது வரவேற்கத்தக்கது தான்” என பதிலளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “அரசியலுக்கு எல்லாரும் வர வேண்டும். இப்போது எனக்கு நடிப்பிலே நேரம் போய்கொண்டிருக்கு. எதிர்காலத்தில் ஒரு வேளை, மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தால் வாய்ப்பிருக்கிறது. நான் எல்லாருக்குமே குரல் கொடுக்கிறேன். திருமாவளவன், விஜய், ஸ்டாலின் என அனைவருக்கும் குரல் கொடுக்கிறேன்.
ஓட்டுக்கு காசு வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ரொம்ப வறுமை, அடுத்த வேலைக்கு சாப்பாடு இல்லை, பசங்களுக்கு பள்ளிக்கட்டணம் கூட கட்ட பணமில்லை என்ற சூழலில், காசு வாங்கிக்கலாம். நம்ம பணத்தை திருப்பி தராங்க. ஆனால் ஓட்டு போடும் போது மட்டும் காசு கொடுத்தவங்களுக்கு போடனும் என்று நினைக்க கூடாது. வாங்குவதில் ஒன்னும் தப்பில்லை. வாங்கிவிட்டு சரியான மனிதர்களுக்கு ஓட்டு போடலாம்” என்றார்.