விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ள படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரித்து இசையமைத்தும் உள்ளார். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, “இந்த படத்தில் எத்தனையோ திறமைசாலிகள் நடிச்சிருக்காங்க. அவங்களோட கம்பேர் பன்னும் போது நான் நடிகர்னு சொல்லிக்கிற முழு தகுதி எனக்கு கிடையாது. நான் முழுக்க முழுக்க நம்புனது நடிப்பை தாண்டி நல்ல கதையை தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான். அந்த கதை என்னை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும்.
என்னை மாதிரி கதை தேர்ந்தெடுக்க இப்போதைக்கு தமிழில் ஆள் யாரும் இல்லை. உதாரணத்துக்கு பிச்சைக்காரன் படத்தில் யாசகராக நடிக்க எந்த ஹீரோவும் ஒத்துக்கமாட்டாங்க. அதனால சில முடிவுகளை நான் தைரியமாக எடுப்பேன். அந்த முடிவுகளுக்கு ஸ்கிரிப்டை மட்டும் நம்பி நடிகனாக மாறிவிட்டேன். இந்த மாதிரி ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிறைய டைரக்டர்கள் உருவாகுவார்கள். அதற்காகத்தான் நடித்துக் கொண்டு இருக்கேனே தவிர நான் நடிகன் என்பதற்காக இல்லை” என்றார்.