விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ளது ‘சக்தித் திருமகன்’ படம். இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இப்படத்தை தயாரித்து இசையும் அமைத்துள்ளார். இப்படத்தின் ‘மாறுதோ’ மற்றும் ‘ஜில் ஜில் ஜில்’ ஆகிய பாடல்கள் இன்று வெளியாகிறது. இதையொட்டி பாடல்கள் வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. வழக்கமாக பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் சூழலில் வித்தியாசமாக பிரியாணையை விஜய் ஆண்டனி வெட்டி கொண்டாடினார். மேடையில் பேசிய விஜய் ஆண்டனி பட இயக்குநர் அருண் பிரபுவை இந்தியாவில் பிடித்த டாப் இயக்குநர்களில் அவரும் ஒருவர் என கூறினார். அவர் கூறியதாவது, “தமிழில் எனக்கு பிடித்த டாப் 5 படங்களில் அருவி படமும் ஒன்று. அதை பார்த்துவிட்டு நாலு முறை கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். அதில் திருநங்களை பற்றி பேசியது, வாழ்க்கை பற்றி சொன்னது எல்லாவுமே எனக்கு புதிய பார்வையை தந்தது. நிறைகுடம் தளும்பாது என சொல்வாரக்ள். அது போலத்தான் அருண் பிரபுவும். அவரது வாழ் படமும் பார்த்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் தெரிந்திருந்ததால் தான் அவர், இது போன்ற படங்களை பண்ண முடிகிறது. 

சக்தி திருமகன் படத்தில் இயக்குநர் வேலையை தாண்டி ஒவ்வொரு நாளும் பட்ஜெட் இருக்கிறதா, எந்தளவு இருக்கிறது என கேட்டுக் கொள்வார். அவரிடம் செலவு பத்தி கவலைப்படாதீங்க, நீங்க எதையும் யோசிக்காம படம் பண்ணுங்க என சொல்வேன். ஒரு தயாரிப்பாளர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அருண் யோசிப்பார். அவரது பண்புக்கும் குணத்துக்கும் அவர் எங்கேயோ இருப்பார். இந்தியாவில் டாப் 3 இயக்குநர்களில் அருண் பிரபுவும் ஒன்று. மக்களுக்கும் அப்படித்தான் இருக்கும். எந்த மொழியில் இருந்து அவர்கள் அருவி, வாழ்  படங்களை பார்த்தாலும் அவர்களுக்கு புதிய பார்வை உண்டாகும்.  ” என்றார்.