இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகராகவும் வலம் வந்த விஜய் ஆண்டனி அடுத்து இயக்குநராகவும் படத்தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். இவர் நடித்த படங்கள் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டு வந்தது. கடைசியாக ஹிட்லர் படம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அவர் கைவசம் ‘ககன மார்கன்’ படம் இருக்கிறது. மேலும் அவர் நடிப்பில் உருவான அக்னி சிறகுகள் மற்றும் வள்ளி மயில் ஆகிய படங்களின் அப்டேட் நீண்ட காலமாக எதுவும் வெளியாகவில்லை. இந்த இரு படங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகராக விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்றும் மற்ற மொழிகளில் பராஷக்தி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் ஆண்டனி கையில் டார்ச் லைட்டுடன் கோபமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
மேலும் இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விஜய் ஆண்டனி, “புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா... இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா” என்ற வரிகளை பதிவிட்டுள்ளார். இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்குகிறார். விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்து இசைப் பணிகளையும் கவனிக்கிறார். இப்படம் இந்தாண்டு கோடையில் வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.