
கரோனா பரவலால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப்பொழுதுபோக்கு துறையிலுள்ள திரைத்துறை உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. ரிலீஸ் தேதி அறிவித்த ஹாலிவுட் படங்களுக்கெல்லாம் அடுத்த வருடம் வரை ரிலீஸ் தேதிதள்ளிப் போடப்பட்டுள்ளது..
இந்நிலையில் கடந்த மாதம் 9 ஆம் தேதி பெரும் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்யப்பட இருந்த விஜய்யின் மாஸ்டர் படம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இன்னும் படத்திற்கு 20 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது என்றும், படம் எப்போது வெளியானாலும் வெற்றிதான் எனவும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களை வாங்கி ஓடிடியில் ஒளிபரப்ப ஓடிடி நிறுவனங்கள் திட்டம் தீட்டியுள்ளது. அதில் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை நல்ல விலைக்கு வாங்கி வெளியிட உள்ளது. இது திரைத்துறையிலுள்ள தயாரிப்பாளர்கள் மத்தியிலும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு வியாபாரச் சுதந்திரம் இருக்கிறது. அதனால் ஓடிடியில் விற்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கின்றனர். அதேபோல திரையரங்கு உரிமையாளர்கள், எங்களுக்கும் வியாபாரச் சுதந்திரம் இருக்கிறது. இனி சூர்யா, ஜோதிகா படங்களைஎங்கள் திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தைப் பெரும் தொகை கொடுத்து வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால், விஜய் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஓடிடியில் முதலில் ரிலீஸ் செய்ய வேண்டாம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவதற்குதான் படம் நடிக்கிறேன். ஆகையால் ஓடிடியில் படம் வெளியிட இஷ்டமில்லை என்று விஜய் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
Follow Us