vijay about his party flag introducing function

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

இதையடுத்து கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் கட்சிக் கொடியினை அம்மாநாட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ண கொடியின் மத்தியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை (22.08.2024) ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்து வகையில் கடந்த 19ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் உள்ள அலுவலகத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் விஜய் நிறுவப்பட்ட கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றி ஒத்திகை பார்த்தார். அந்த கொடி மஞ்சள் நிறத்தில் நடுவில் விஜய்யின் முகம் இடம்பெற்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது விஜய்யின் அருகில் இருந்த புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் நிற வேஷ்டி சட்டையில் காணப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் விரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

கட்சிக் கொடி அறிமுக நிகழ்ச்சிக்காகத் தமிழகம், கேரளா, புதுச்சேரி என பல்வேறு பகுதிகளில் 300 நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கட்சி அறிமுகக் கொடி நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கேட்டு த.வெ.க. சார்பில் காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சிக் கொடி அறிமுக நிகழ்ச்சி குறித்து த.வெ.க. சார்பில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி. கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாளை காலை 9.15 மணி முதல் கட்சித் தலைமை நிலையச் செயலகமான பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment