ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த புதிய அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியானது. அதன்படி விஜய் பிறந்தநாளுக்கு முந்தைய நாளான ஜூன் 21-ஆம் தேதி மாலை படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சற்று முன் சன் தொலைக்காட்சியில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு 'சர்க்கார்' என்று வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இறங்கி அவர்களது படங்களும் அரசியல் பேசி வரும் நிலையில், இந்த வரிசையில் அடுத்து அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சி பல பேட்டிகளில் இதை வெளிப்படுத்தினார். விஜயின் கடந்த படமான 'மெர்சல்' அரசியல் ரீதியாக எதிர்ப்புகளை சந்தித்தது. இந்த நிலையில் துப்பாக்கி, கத்தி வெற்றிகளைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் முருகதாஸுடன் கை கோர்த்தார் விஜய்.
முருகதாஸின் 'ரமணா' விஜயகாந்துக்கும், தெலுங்கில் 'ஸ்டாலின்' படம் சிரஞ்சீவிக்கும் அரசியல் மைலேஜ் கொடுத்தது. இத்தனையையும் கருத்தில் கொள்ளும்போது விஜயுடன் முருகதாஸ் இணையும் படத்தில் வெளிப்படையாக அரசியல் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்துக்கு 'சர்க்கார்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.