Skip to main content

"நம்பகத்தன்மையோடும் வலிமையாகவும் இருக்கிறார்" - உதயநிதியை பாராட்டிய விக்னேஷ் சிவன்!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Vignesh Sivan praises Udayanithi Stalin

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் மற்றும் 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 2019-ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்டிக்கள் 15' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 'நெஞ்சுக்கு நீதி' படம் நேற்று (20.05.2022) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெஞ்சுக்கு நீதி படம் அதன் நோக்கத்திற்கு உண்மையாக நின்றிருக்கிறது. அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரின் குழு அருமையாக எடுத்துள்ளார்கள். உதயநிதி சார், அந்த கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மையோடும் வலிமையாகவும் இருக்கிறார். அவரின் தோற்றம் படத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது. அற்புதமாக உழைத்திருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Case registered against Minister Udayanidhi Stalin

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்துப் பேசியது தொடர்பாக மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரின் ஹர்ரா நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.