நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16.04.2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் குறித்து உருக்கமான ஒரு பதிவினைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "சமூக சீர்திருத்த கருத்துகளை அழுத்தமாக பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள் நட்ட மரங்களைப்போல என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனப் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே” எனக் குறிப்பிட்டுள்ளார்.