விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தில் இருந்து கடந்த ஏப்ரலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படப்பிடிப்பு முடிந்ததாக ஒரு வீடியோ வெளியாகியிருந்தது. 

இப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் அதை நோக்கி பட பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இப்படத்தில் நடன இயக்குநர் ஜானியும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 1ஆம் தேதி தனது சமூக வலைதளப் பக்கத்தில், விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நீங்கள் என் மீது காட்டும் அக்கறை, மரியாதை மற்றும் நம்பிக்கைக்காக உங்களுடன் பணியாற்றுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் செய்த மேஜிக்கை உங்கள் அனைவருக்கும் காட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்த பதிவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, நன்றி தெரிவிக்கும் வகையில் உங்கள் மீது படக்குழு அன்பு வைத்திருப்பதாக பதிவிட்டிருந்தர். அது தற்போது பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதாவது நடன இயக்குநர் ஜானி கடந்த ஆண்டு 16 வயது உள்ள ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளிவந்தார். இப்போதும் அவர் ஜாமீனில் வெளியில் இருக்கும் நிலையில், பாலியல் வழக்கில் கைதான ஒருவரை படத்தில் இணைத்ததற்காக விக்னேஷ் சிவனையும் அவரது மனைவி மற்றும் படத் தயாரிப்பாளரான நடிகை நயன்தாராவையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.