விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முன்னோட்டம் இம்மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அதே நாளில் கூலி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்ததால் தள்ளி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் முன்னோட்டத்தில், அனிருத் குரலில், 2040 ஆம் ஆண்டில் கண்கவரும் உலகத்தில் ஆரம்பிக்கிறது. காதலுக்கு இன்ஸூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்யப் போகிறான் என முன்னோட்டம் எடுத்துரைக்கிறது. மேலும் அனிருத் - விக்னேஷ் சிவன் காம்போவில் 2015ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ‘எனக்கென யாருமில்லையே’ பாடல் முன்னோட்டத்தின் இறுதியில் இடம்பெறுகிறது. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.