Nayanthara

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisment

திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முடிவெடுத்துள்ளனர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் இப்படம் விருது வென்றது. இந்த தகவல் வெளியானதும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கூழாங்கல் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த நிலையில், இவ்விருதை நடிகை நயன்தாரா கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், எங்களுடைய முதல் விருது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும் அப்பதிவில், ''எங்களுடைய முதல் சர்வதேச விருதுடன். எங்கள் முதல் தயாரிப்பான ‘கூழாங்கல்’ திரைப்படம் ரோட்டர்டாம் 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இந்த டைகர் விருதை எங்களுக்கு பெற்றுத்தந்தது. எங்கள் மனதுக்கு நெருக்கமான இடத்தில் இதை வைத்திருக்கும் இந்த தருணத்தில் இப்படியொரு அற்புதமான படத்தை உருவாக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படத்துக்குக் கிடைக்கும் அனைத்து விருதுகளும், ஊக்கங்களும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகின்றன. இந்த நேரத்தில் எங்கள் இயக்குநர் ரோமானியாவில் தனது அடுத்த விருதைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.