Advertisment

"முகபாவனையில் காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும்..." - மாமன்னன் குறித்து விக்னேஷ் சிவன்

Advertisment

vignesh shivan about maamannan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக வடிவேலுவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும், படத்தின் வெற்றியின் காரணமாக மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதையடுத்து படத்தின் வெற்றியை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வடிவேலு ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி கூறினார் உதயநிதி.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன். வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.

முகபாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குநர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்கபலமாக துணைநின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தி நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

actor Vadivelu maamannan Udhayanidhi Stalin vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe