/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/202_18.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் நேற்று (31.03.2023) திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 'ஏ' சான்றிதழுடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் தங்களத்து கருத்தை வெளிப்படுத்தி படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் விடுதலை படம் ஓடிக்கொண்டிருந்த போது இடையில் நிறுத்தப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது. திரையரங்கில் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கையில் திடீரென உள்ளே வந்த போலீசார், இப்படம் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய படம் அல்ல என அங்கு சிறுவர்களுடன் வந்திருந்த குடும்பத்தினருடன் கூறினர். மேலும், அவர்களை வெளியே அழைத்துச் செல்லுமாறு சொல்லியுள்ளனர்.
இதனால் அங்கிருந்த தாய்மார்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஒரு பெண்மணி, மக்களுடையவலியைப் பேசக்கூடிய ஒரு படத்தை குடும்பத்தோடு பார்க்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், “பெத்தவங்களுக்கு தெரியாதா சார்... எங்க வீட்டு குழந்தைகளுக்கு என்ன காட்டணும்னு... அரைகுறை ஆடையுடன் வரும் படங்களை குழந்தைகளுக்கு காட்டலாம். ஆனால், இந்தப் படத்தை காட்டக்கூடாதா... இதனால் நீங்கஇது போன்ற படத்தை குடும்பத்துடன் பார்க்கக்கூடாதா. பார்த்து தெரிஞ்சுக்கக் கூடாதா” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதோடு அங்கிருந்தவர்கள் வன்முறை காட்சிகளுக்காக மட்டுமே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் ஆபாசக் காட்சிகள் இப்படத்தில் இல்லை என்றும் போலீசாருடன் வாதிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த பலரும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுவர், சிறுமிகளை குடும்பத்துடன் படம் பார்க்க அனுமதித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய முன்தினம் சிம்புவின் பத்து தல படம் வெளியான போது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் சில பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்த குடும்பத்தாரை டிக்கெட் இருந்தும் உள்ளே விட அனுமதி மறுப்பு தெரிவித்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த சம்பவமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)