Skip to main content

“ஒரு கிடாயின் கருணை மனு போல் வாழ்வியல் சார்ந்த கதை” - விதார்த்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

vidhaarth about kuiko movie

 

விதார்த் மற்றும் யோகி பாபு முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள படம் ‘குய்கோ. இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார்.  இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

vidhaarth about kuiko movie

 

அப்போது விதார்த் பேசியதாவது, "இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணி தாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்‌ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணி தாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், 'என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?' என 'ஃப்ரீஸர் பாக்ஸ்' கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்தபோது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. 

 

நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, 'நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதைதான். அவ்வளவு அழகான கதை. எப்படி 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறணும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரணும்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்