இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் நேற்று நடந்த படப்பிடிப்பின் போது கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டன்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் கார் பறக்கும்படியான காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது காரை இயக்கிய மோகன்ராஜ், காரை பறக்கும்படி இயக்கி கீழே இறக்கிய போது எதிர்பாராதவிதமாக அவரால் சரியாக இறக்க முடியவில்லை. பறந்த வேகத்தில் கீழே விழுந்து தலைகீழாக கார் புரண்டுள்ளது. உடனே அவரை மீட்கப் படக்குழுவினர் பரபரப்புடன் செல்கின்றனர். இந்த பரபரப்பு காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே முன்னதாக விடுதலை, சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருவர் உயிரிழந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பில் முறையாக மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தது. இருப்பினும் தற்போது ஒரு உயிர் பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.