Skip to main content

கமல் படத்தில் இன்ப அதிர்ச்சி; பெங்களூரிலிருந்து ஓடி வந்தேன் - விச்சு விஸ்வநாத்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Vichu Vishwanath Interview

 

திரையுலகில் தான் சந்தித்த அற்புதமான அனுபவங்கள் பலவற்றை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்த நடிகர் விச்சு விஸ்வநாத் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

இளம் வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சுந்தர்.சி இயக்கிய அருணாச்சலம் படம் பெரிதும் பேசப்பட்டது. பக்கா கமர்ஷியல் படம். அந்தப் படத்தின் கிளைமாக்சில் சௌந்தர்யாவின் மாப்பிள்ளையாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். நடிகர் ரகுவரன் கல்லூரி காலத்திலிருந்தே என்னுடைய நெருங்கிய நண்பர். அவரை நான் மிஸ் செய்வேன் என்று நினைக்கவே இல்லை.

 

சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் காதல் கதை சுவாரஸ்யமானது. முறைமாமன் படப்பிடிப்பின் போது அடிக்கடி காரை நிறுத்தி யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார் சுந்தர்.சி. யார் அது என்று அடுத்த நாள் நான் கேட்டபோது குஷ்பூவுடன் தான் காதலில் இருக்கும் விஷயத்தைக் கூறினார். மிகவும் சந்தோஷப்பட்டேன். குஷ்பூ என் தங்கை மாதிரி. பல்வேறு துறைகளில் அவர் தொடர்ந்து சாதிப்பது ஒரு சகோதரனாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராதிகாவும் என்னுடைய நல்ல நண்பர். என்னுடைய கஷ்டகாலங்களில் அவர் செய்த உதவிகளை மறக்கவே முடியாது.

 

சுந்தர்.சி அன்பே சிவம் படத்தை இயக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் எனக்கு சிறிய ரோலாவது வேண்டும் என்று கேட்டேன். அதுபோலவே அந்த வாய்ப்பும் வந்தது. ஷூட்டிங்குக்கு முதல் நாள் பெங்களூரில் ஒரு கன்னடப் பட ஷூட்டிங்கிலிருந்து ஓடி வந்தேன். கமல் சாரோடு இணைந்து பணியாற்றியது அவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். என்னுடைய மகளுக்கு மிகவும் பிடித்த படம் அன்பே சிவம். இன்றும் பலரும் சிலாகிக்கும் அந்தப் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பது எனக்குப் பெருமை. வின்னர் படத்தில் வடிவேலுவோடு நடிக்கும்போது சிரிப்பை அடக்க முடியாமல் நானும் ரியாஸ்கானும் பல டேக்குகள் வாங்கினோம். வடிவேலு ஒரு மாபெரும் நடிகர்.

 

திரையில் தோன்றும்போது வடிவேலு கொடுக்கும் டிரான்ஸ்பர்மேசன் அசாத்தியமானது. நடிகர் மயில்சாமியும் நானும் நெருங்கிய நண்பர்கள். விவேக் சார், மயில்சாமி போன்றவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் முதலில் எனக்கு வேறு ஒரு கேரக்டர் தான் சொல்லியிருந்தார் சுந்தர்.சி. அதன் பிறகு இந்த திருநங்கை கேரக்டரை ஏன் நான் செய்யக்கூடாது என்று கேட்டார். அப்படி உருவானது தான் அந்தக் கேரக்டர். இயக்குநர் மற்றும் நடிகர் சிங்கம்புலி தான் அந்தக் கேரக்டரை நான் சிறப்பாக செய்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியவர்கள்.

 

சிம்பு, தனுஷ், யோகிபாபு என்று இப்போதுள்ள நடிகர்களுடனும் நடித்து வருகிறேன். வெப்சீரிஸ் வந்ததால் நடிகர்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. சின்னதிரையில் முதலில் நான் நடித்தது ஒரு இந்தி சீரியலில் தான். அதன் பிறகு எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது நந்தினி சீரியல். மக்கள் என் மேல் கோபப்படும் அளவுக்கு ரீச்சான வில்லன் வேடம் அது. அரண்மனை படத்தின் அனைத்து பாகங்களிலும் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்துள்ளேன். அடுத்து வரப்போகும் அரண்மனை 4 படத்திலும் நடிக்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்