
நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், நடிகர் நிதீஷ் வீரா மறைவுக்கு இயக்குநர் வெற்றி மாறன் நேற்று (17.05.2021) இரவு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில்...

"நண்பர் நிதிஷ் வீரா கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று நேற்று மாலைதான் எனக்கு தகவல் வந்தது. உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன். இரண்டு நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள். ஆனால் இன்று (17/05/2021) காலை ஆறு மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்திதான் வந்தது. அவரை எனக்கு ‘புதுப்பேட்டை’ படத்திலிருந்து தெரியும். அப்போது நான் உதவி இயக்குநராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்குப் பழக்கம் ஆனார்.
நடிகராக அவருக்கு வெற்றி தோல்வி இருந்துவந்தது. ஆனால், ‘அசுர’னுக்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும், என்னைப்போல அவரைத் தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மக்கள் அனைவரும் சரியான முறையில் முகக்கவசத்தை அணிய வேண்டும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், உடல் வலிமையுடன் இருக்கிறேன், எனக்கு கரோனா வராது என்று யாரும் எண்ணக் கூடாது. வெளியே சென்றுவரும் இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)