வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இபப்டத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வெற்றிமாறனோடு இணைந்து வழங்குகிறார். இப்படதின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றது. மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளில் விருது வென்றுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் கொடுக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்பு வந்ததால் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போது பல சிக்கலுக்கு பிறகு வரும் 5ஆம் தேதி வெளியாகிறது. இதனால் படத்தின் புரொமோஷன் பணிகளை வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் சமீபகாலமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், இனிமேல் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் படங்கள் தயாரிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “ஒரு தயாரிப்பாளர் வேலையை விட டைரக்டர் வேலை ஜாலியானது. டைரக்டராக இருந்தால், கிரியேட்டிவான ஒரு விஷயம் தயாரிப்பாளரிடம் கேட்போம், அது வந்துவிடும், அவ்ளோதான். அதாவது நம்ம வேலையை மட்டும் செய்வோம். ஆனால் ஒரு தயாரிப்பாளரின் வேலை அப்படி கிடையாது. எல்லாத்துக்கும் கவனம் தேவை. இங்கு ஒவ்வொருவரும் பேசும் போது, இதற்கு என்ன கமெண்ட் வரும் என்றுதான் யோசித்து கொண்டு இருந்தேன். ஏனென்றால் இது அனைத்தும் படத்தினுடைய வணிகத்தை நேரடியாக பாதிக்கும். அது ஒரு தயாரிப்பாளராக அழுத்தத்தை தரும். ஏற்கனவே நான் தயாரித்த மனுசி படம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துவிட்டது. விரைவில் படம் வெளியாகும். ஆனால் ஒரு சென்சார் டீம், இரண்டு ரிவைஸிங் கமிட்டி அப்புறம் கோர்ட்டுக்கு போய்விட்டு வந்திருக்கிறது.
அதே போல் பேட் கேர்ள் படமும் சென்சார் சம்பந்தமாக ரிவைஸிங் கமிட்டியிடம் சென்று யு/ஏ 16+ செர்டிஃபிகேட் வாங்கியிருக்கிறது. அதனால் நம்மளை போன்ற கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு படம் தயாரிப்பது, பெரிய சவாலாக இருக்கிறது, அதனால் இனிமேல் கிராஸ் ரூட் கம்பெனியில் படம் தயாரிக்கப்போவதில்லை. இது தான் என் கம்பெனியின் கடைசி படமாக இருக்கும். இதற்கு பிறகு கம்பெனியை மூடுகிறோம்” என்றார்.