vetrimaaran teams up with dhanush again

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் முதல் பாகமான விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.சி.ஸ்ரீராம், மாரி செல்வராஜ், ராஜு முருகன் உள்ளிட்ட பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த வெற்றியை படக்குழு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிலையில் இப்படம் தற்போது 25 நாளை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

இதனை முன்னிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை பாகம் 1 & 2 வழங்கியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல். இப்படம் எங்கள் நிறுவனத்துக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டு படம் தொடர்பாக பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அடுத்து தயாரிக்கும் இரண்டு புதுப் பட அறிவிப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, “வெற்றிமாறனின் 7வது படமான விடுதலை 2 வெற்றிக்குப் பிறகு, அவரது இயக்கதில் 9வது படத்தில் தனுஷுடன் இணைவதில் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியடைகிறது. தொடர் வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, புதிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். விடுதலையின் வெற்றிக்குப் பிறகு. ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியுடன் மீண்டும் இணைகிறது. விடுதலை தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்த இயக்குநர் வெற்றிமாறன் குழுவின் முக்கிய உறுப்பினரான மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது” என்றுள்ளது.

வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கும் வாடிவாசல் பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். சூரி தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் வருகிறார்.

Advertisment