சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்ட விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் நடைபெற்றது. இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். மேலும் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வெற்றிமாறனை மேடைக்கு பேச அழைத்த தொகுப்பாளினி, அவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியரின் மகன் என கூறியிருந்தார். ஆனால் அதில் கொஞ்சம் தான் உண்மை என மேடை ஏறிய பின்பு திருத்திய வெற்றிமாறன், “நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். ஆனால் என் அம்மா அரசு பள்ளி ஆசிரியர் கிடையாது. தனியாக ஒரு ஸ்கூல் நடத்தி கொண்டு வந்தார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இங்கு வந்த மாணவர்கள் அகரம் இருந்ததால் இந்த நல்ல வாழ்க்கை என சொல்லியிருந்தார்கள். அவர்களை பார்க்கும் போது, அகரம் இல்லாமல் இருந்திருந்தால் இவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற உணர்வு வந்தது. எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார வசதியும் சமூக செல்வாக்கு அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுப்பதை பொறுத்து தான் நாம் யார் என்பது தீர்மானம் ஆகிறது. சூர்யாவிற்கு இருக்குற செல்வாக்கிற்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அதை தாண்டி விதை திட்டம் மூலம் இளைஞர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறார். அது சரியான இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். அந்த தேர்வு முறை சிறப்பாக இருந்தது. அகரமின் வெற்றி சதவீதம் 98. அதற்கு மாணவர்களுக்கு ஒரு காரணம்.
ஹியூமன் கைண்ட்(Humankind) என ஒரு புத்தகம் இருக்கிறது. அதன் அடிப்படை, மற்ற உயிரினங்களை விட மனிதர்களுக்கு இருக்கும் தனித்துவம் அறிவு பகிர்தல் என்பது தான். இது எல்லாருக்கும் வராது. நமக்கு கிடைத்திருக்கிற சந்தர்பத்தை பயன்படுத்தி எப்படி பகிர முடியும் இந்த சமூகம் நமக்கு ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது. திருப்பி அதற்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். குறிப்பாக தன்னார்வலராக இருப்பது மிகப்பெரிய சவால். நமது நேரத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு நிறைய தைரியம் வேண்டும். சூர்யாவின் இலக்கை அடைவதற்கு அகரமில் படித்த முன்னாள் மாணவர்களும் தன்னார்வலராக இணைய வேண்டும். இது எனது வேண்டுகோள்” என்றார். பின்பு அவரிடம் அசுரன் படத்தில் படிப்பின் முக்கியத்துவம் குறித்து இடம் பெறும் வசனம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த வசனத்தை எழுத காரணம், படித்தவர்கள் எல்லாம் நல்ல நிலைமையில் இருப்பதுதான். ஒரு தலைமுறையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும் என்றால், ஒருவனுக்கு கல்வியை கொடுப்பதைத் தாண்டி ஒருவனுக்கு மறுக்கப்படுகிற கல்வியை தடுக்க வேண்டும் என்பது தான். இது ரொம்ப முக்கியமானது. படத்தில் வரும் வசனம் யாரும் சொல்லாத புதிது ஒன்றும் கிடையாது. நடைமுறையில் அதை செயல்படுத்துபவர்கள் இருக்கும் போது, வசனமாக பேசியதில் பெருமை ஒன்றும் கிடையாது” என்றார். சூர்யாவும் வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் பணியாற்ற இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது அந்த படம் தள்ளி போகியுள்ளது குறிப்பிடத்தக்கது.