
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே, பல்வேறு கலை மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று (05.02.2023) சென்னை அசோக் நகரில் விசிக சார்பில் நடந்த பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "ஒரு விமர்சனம் வரும்பொழுது அதை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயக போக்கு. அதை எதிர்ப்பது அல்லது நமக்கு எதிரான விமர்சனமே வரக்கூடாது என்பது; அப்படி எந்த ரூபத்தில் விமர்சனம் வந்தாலும் அதனை ஒடுக்குவது; அந்த விமர்சனத்தை முன்வைக்கிறவர்களை குற்றவாளிகளாக்குவது; அவர்களை தேச விரோதிகளாக்குவது என்பது பாசிசத்தின் அடையாளங்கள். இந்த ஆவணப்படத்தை பார்ப்பது என்பது பாசிசத்திற்கு எதிரான செயலாகத்தான் பார்க்கிறேன். இதனை பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரானவை தான். இந்த ஆவணப்படத்தை தமிழில் கொடுத்ததற்கு விசிகவிற்கு வாழ்த்துக்கள்" என்றார்.
முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் மணி விழா நிகழ்ச்சியில் வெற்றிமாறன், "திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்" எனப் பேசியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.