தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

Advertisment

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசுகையில், “கல்வி நம் எல்லோருக்கும் எவ்வளவு முக்கியம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் எப்போதுமே கல்விக்கு முக்கியத்துவம் இருந்திருக்கு. பெற்றோர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் பிள்ளைகளை படிக்க வைக்க நினைப்பார்கள். அது 50 வருஷமா தொடர்ந்து கல்விக்காக நடந்த வேலையின் வெளிப்பாடு.   

Advertisment

இப்போது நம்மிடம் கல்வியை தடுப்பதற்கு சிஸ்டமிக்காக ஒரு வேலை நடக்கும் போது, அதை சிஸ்டமிக்காகவே எதிர்க்கிற வேலை தான் கடந்த 4 வருஷமாவே நடந்துக் கொண்டிருக்கிறது. உயர்கல்வியில் இந்த வருஷம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. அதை பார்க்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் உண்மையிலே கல்வியில் பெரும் பாய்ச்சலை கண்டிருக்கிறோம். இது சாதரண விஷயமில்லை. ஏனென்றால் நாம் அங்கு போய்விடக்கூடாது என்பதற்கு அவ்ளோ வேலைகள் நடக்கிறது. ஆனால் நாம் அங்கு போவோம், எப்படி போக வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று செய்கின்ற ஒரு செயல் ரொம்ப ரொம்ப நன்றிக்குரியது.

எல்லாரும் சொல்வதை போல காலை உணவு என்பது ரொம்ப முக்கியம். அதற்காகவே பள்ளிக்கு வருகிறவர்கள் இருக்கிறார்கள். நிறைய பேர் தங்கள் படிப்பை பள்ளியோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த வருடம் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. அந்தளவிற்கு திட்டமும் ஊக்கமும் அதை செயல்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு குழுவும் இங்கு இருக்கிறது என்பது நமக்கு மிகப்பெரிய பலம். அதற்கு முதல்வருக்கும் அரசுக்கு நன்றி” என்றார்.      

Advertisment