வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள அப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடைபெற்றது. இப்பல்கலைக்கழக சார்பில் ஆண்டுதோறும் சினிமா, தொழில், விளையாட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சினிமாத் துறை சார்பில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. இவரைத் தவிர்த்து விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும், தொழில்துறையில் ஏ.எம்.கோபாலனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டங்களை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய வெற்றிமாறன், “நான் படிக்கும் போது, கான்வெக்கேஷன் ட்ரெஸ் போடல. இப்போ போட்ருக்கேன். அவ்வளவுதான். மத்தபடி ஒன்னுமில்லை. பட்டம் கொடுத்ததற்காக வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கும் ஐசரி கணேஷ் சாருக்கும் நன்றி” என்றார். அப்போது அவரிடம் இனிமேல் டாக்டர் வெற்றிமாறன் என பெயர் போடுவீங்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எதுவுமே வேணாம். நம்ம பெயர் இருந்தா மட்டும் போதும்” என்றார்.
பின்பு அவரிடம் டாக்டர் பட்டம் வாங்கிவிட்டதால் இனிமேல் உங்கள் படங்களில் வன்முறை காட்சிகள் குறையுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்து கொண்டே பதிலளித்த அவர், “ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது ரேகிங் பன்னுனதில்ல. ஆனா என்ன இங்க வச்சு ரேகிங் பண்றீங்க” என்றவர்கேள்விக்கு பதிலளிக்கையில், “அதெல்லாம் கதையை பொறுத்து” என முடித்து கொண்டார்.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நானும் ஐசரி சாரும் இணைந்து ஒரு படம் பன்றோம். சீக்கிரமா ஆரம்பிப்போம். என்னுடைய அடுத்த பட அப்டேட் இன்னும் 10 நாளில் வந்துவிடும். தயாரிப்பு நிறுவனத்தை என்னுடைய வசதி காரணமாகத்தான் இழுத்து மூடினேன். நிறைய ஒர்க் இருக்குது, அதுமட்டுமல்லாம வேறுசில அழுத்தங்களும் இருக்குது. அதுதான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை. நிறுவனத்தை மூடியது தோல்வியில் வராது” என்றார். வெற்றிமாறன் தற்போத் சிம்புவை வைத்து வட சென்னை பட கதை உலகை மையப்படுத்தி ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு புரொமோ விரைவில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமல்லாமல் வட சென்னை 2 மற்றும் வாடிவாசல் படத்தை கைவசம் வைத்துள்ளார்.