வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.
இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒன்றில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி மட்டும் இடம் பெறுகிறார். கதை நாயகனான சூரி இரண்டு போஸ்டரிலும் இடம் பெறவில்லை. முன்னதாக சூரியை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம் பெறும் என வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.