வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதலில் பட அறிவிப்புக்கான ப்ரொமோ ஷூட் நடந்தது. இதில் இயக்குநர் நெல்சனும் இடம் பெற்றிருந்தார். படத்தை தாணு தயாரிக்கிறார். இப்படம் வட சென்னை பட உலகத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதனால் வட சென்னை 2, தனுஷ் காப்புரிமை தர பணம் கேட்கிறார் என ஏகப்பட்ட வதந்திகள் உலா வந்தது. ஆனால் அதையெல்லாம் வெற்றிமாறன் சமீபத்தில் தெளிபடுத்தி வீடியோ வெளியிட்டிருந்தார். இப்படம் வட சென்னை 2 அல்ல. தனுஷ் எதிர்ப்பு தெரிவிகக்வில்லை எனக் கூறியிருந்தார். வட சென்னை உலகத்தை மையப்படுத்தி படம் உருவாகுவதால் வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்களும் இதிலும் வருகின்றனர்.
இப்படம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. படத்திற்கு ராஜன் வகையரா என பெயர் வைத்துள்ளதாகவும் பின்பு சிம்பு இரண்டு லுக்கில் வருவதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது படப்பிடிப்பு மற்றும் அறிவிப்பு புரோமோ ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு ப்ரோமோ யூட்யூபில் வெளியிடாமல் நேரடியாக திரையரங்குகளில் வெளியிடும் பிளானில், அதுவும் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகும் ‘கூலி’ படத்துடன் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக அறிவிப்பு வெளியிட்டு படப்பிடிப்பிற்கு செல்லும் வெற்றிமாறன், இந்த முறை அறிவிப்பு ப்ரொமோ மற்றும் அதை தியேட்டரில் வெளியிடும் திட்டம் என புது முயற்சிகளாக எடுத்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.