/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/379_13.jpg)
வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் முழுவதுமாக தயாராகி பல மாதங்கள் ஆகிறதென கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் அதில் காவல் துறையின் அடக்குமுறைக்கு பாலாஜி சக்திவேலும், ஆன்ரியாவும் எவ்வாறு ஆளாகிறார்கள் என்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் பல்வேறு புரட்சிகர வசனங்களும் இடம்பெற்றிருந்தது. இது பலரது வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
இதையடுத்து இப்படம் சென்சாருக்கு சென்ற நிலையில், படம் பார்த்த அதிகாரிகள், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர். மேலும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து படத் தயாரிப்பாளரான வெற்றிமாறன், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே அவர் வைத்த கோரிக்கையான படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வெற்றிமாறன் தரப்பில், படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்த உத்தரவில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்று குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்பு தணிக்கை வாரிய தரப்பில், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் காட்சிகள் இருப்பதாக தெரிவித்து அக்காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என வெற்றிமாறன் தரப்புக்கு சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கினை பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.பா.மோகனின் மகன் வழக்கறிஞர் சுபாஷ் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)