வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். தாணு தயாரிக்கும் இப்படத்தின் புரொமோ வரும் 4ஆம் தேதி வெளியாகிறது. இது தொடர்பாக ஒரு குட்டி புரொமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இப்படத்தை முடித்து விட்டு தனுஷை வைத்து ‘வட சென்னை 2’ படத்தை இயக்கவுள்ளார். வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருஷம் இருக்கும் எனவும் அதற்கடுத்த வருஷம் ரிலீஸாகும் எனவும் தனுஷ் சமீபத்திய ஒரு விழாவில் தெரிவித்திருந்தார். இதனிடையே சூர்யாவை வைத்து அவர் இயக்க கமிட்டாகியிருந்த வாடிவாசல் படம் தள்ளி போகிறது.
இந்த நிலையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசியல் பேசி வரும் வெற்றிமாறன் சென்னை லயோலோ கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் அரசியல் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அவர் பேசுகையில், “மனிதர்கள் ஒரு சமூக அரசியல் விலங்கு. அரசியல் என்றால் வாக்கு அரசியல் இல்லை, நாம் யார், எங்கு வாழ்கிறோம், என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வோடு இருப்பது ரொம்ப முக்கியம். ஒரு மாணவர்களாக நீங்கள் இதை தெரிந்திருக்க வேண்டும்.
அதுபோக எதை நாம் இலக்காக வைத்திருக்கிறோம், எதை நோக்கி பயணிக்க போகிறோம், எதை பின்பற்ற போகிறோம், யாரை பின்பற்ற போகிறோம், எதற்காக பின்பற்ற போகிறோம், நாம் பின்பற்றும் மனிதர் சரியான நபரா என இது எல்லாமே தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் எது சரி, எது தப்பு, எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களை சுற்றி நடக்கிற விஷயத்தை பாருங்கள். நிறைய படியுங்கள், வாசியுங்கள்.
இந்த சமூகம் இன்றைக்கு என்னவாக இயங்கி கொண்டிருக்கிறது, அதற்கு எது ஊக்கமாக இருக்கிறது இதை பற்றியும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய விஷயங்களை எதற்காகவும் எந்த நேரத்திலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது” என்றார்.