இயக்குநர் வெற்றிமாறன், தற்போது தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஒரு ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ள அவர், பேட்டியின் போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Advertisment

அப்போது அவரிடம் தனுஷ் தயாரிப்பில் அவர் இயக்கி ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்ட விசாரணை படம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், “விசாரணை படத்தை ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு எடுத்து முடித்தோம். அந்த படத்துக்காக நான் சம்பளம் வாங்கவில்லை. அதே போல் படத்தில் நடித்த தினேஷ், கிஷோர் மற்றும் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், எடிட்ட் செய்த கிஷோர் என யாருமே சம்பளம் வாங்கவில்லை. நடிகர் சமுத்திரக்கனி மட்டும் 5 லட்சம் வாங்கினார். அதுவும் அவருக்கு நாங்க சம்பளம் வாங்காத விஷயம் தெரியாது. அதை மறைத்து அவரை ஏமாற்றி வாங்க வைத்தோம். ஆனால் அதன் பிறகு அவருக்கு அது தெரிந்து வருத்தப்பட்டார். எனக்கு இது போன்ற கதையை ஒழுங்காக எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தான் இருந்தது. 

இந்தப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 3 கோடியே 85 லட்சம் கலெக்ட் செய்து, வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் நாங்களெல்லாம் சம்பளம் வாங்கியிருந்தால் இந்த வெற்றி சாத்தியமில்லாமல் போயிருக்கும். இன்றைய காலகட்டத்தில் அது போன்ற ஒரு படம் எடுத்தால் 8 கோடி செலவாகும். இப்பவும் அந்த பட்ஜெட்டில் என்னால் படம் எடுக்க முடியும். சொல்லப்போனால் எல்லா படமுமே நான் கம்மியான பட்ஜெட்டில் தான் எடுக்க நினைப்பேன். ஆனால் சில சமயங்களில் பணத்தேவை அதிகமாகிவிடுகிறது,  அதுதான் கடைசியில் பிரச்சனையாகிறது. 

விசாரணை வெற்றி பெற்ற பிறகும் நான் பணம் வாங்க விரும்பவில்லை. முதலில் இந்த படம் ஆரம்பிப்பது தொடர்பாக தனுஷிடம் பேசும்போது, அவர் கதையே கேட்கவில்லை. கதை கேட்டால் எனக்கு பிடித்து விடும், பிடித்துவிட்டால் என்னால் நடிக்க முடியாது ஏனென்றால் எனக்கு ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது என சொல்லி படத்திற்கு பட்ஜெட் எவ்வளவு ஆகும் என மட்டும் கேட்டார். இரண்டரை கோடி ஆகும் என சொன்னேன், உடனே சரி என சொல்லிவிட்டு பட வேலைகளை ஆரம்பிக்க சொன்னார். பிறகு படம் முடிந்து வெனிஸ் திரைப்படவிழாவில் ப்ரீமியர் செய்யும் போதுதான் அவர் படத்தை பார்த்தார். அதுவரை பார்க்கவில்லை. அதுபோக ஆஸ்கர் விருதுக்காக மூன்றரை கோடி வரை பட விளம்பரத்திற்கு செலவு செய்தார். இந்த அனுபவம் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளர், படத்தை இந்தளவிற்கு எடுத்து செல்லும் போது எதற்கு நான் சம்பளம் வாங்க வேண்டும். இது போன்ற தயாரிப்பாளர்கள் தான், எனக்கு கிடைத்திருக்கிறார்கள்” என்றார். 

Advertisment

தயாரிப்பைத் தாண்டி, வெற்றிமாறனின் இயக்கம் என பார்க்கையில், சமீபத்தில் சிம்புவை வைத்து ஒரு படம் தொடங்கினார். சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் ப்ரொமோ ஷூட் சென்னையில் கடந்த ஜூலையில் சில தினங்களுக்கு மட்டும் நடந்தது. இன்னும் 15 நாட்களுக்குள் அந்த ப்ரொமோ வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு முன்பு சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் இயக்கவிருந்த நிலையில் அப்படம் தள்ளி போகிறது. இப்படத்தை தாண்டி வட சென்னை 2, மற்றும் எல்ரெட் குமார் தயாரிப்பில் தனுஷுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார்.