வெற்றிமாறன், ‘விடுதலை 2’ படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருந்தார். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வந்தார். ஆனால் திடீரென அந்த படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. பின்பு சிம்புவை வைத்து ஒரு படமெடுக்க கமிட்டாகியுள்ளார் என்றும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெற்றிமாறன், சிம்பு ஒரு படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதில் இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார். தாணு தயாரிப்பதாக சொல்லப்பட்ட இந்த படம் வட சென்னை இரண்டாம் பாகம் எனவும் அல்லது வட சென்னை படக் கதையை தொடர்புப்படுத்தி உருவாகுவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து இப்படம் வட சென்னை படக் கதையை தொடர்புப்படுத்தி உருவாகுவதால் வட சென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இப்படத்திற்குத் தடையில்லா சான்றிதழ் வழங்க ஒரு குறிப்பிட்ட தொகை கேட்பதாக ஒரு தகவல் உலா வந்தது. இது போல் இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவை அனைத்திற்கும் விளக்கமளிக்கும் வகையில் வெற்றிமாறன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் படம் தொடர்பாக உலா வரும் தகவல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முதலில் தனது அடுத்த படம் குறித்து பேசிய அவர், “என்னுடைய அடுத்த படம் தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகிறது. வாடிவாசல் படம் ரைட்டிங்கில் கொஞ்சம் தாமதமாகும். டெக்னிக்கலாக விலங்குகளின் பாதுகாப்புக்காகவும் நடிகர்களின் பாதுகாப்புக்காகவும் வேலை பார்த்துட்டு இருக்கோம். அதற்கு இன்னும் கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது” என்ற அவர் படம் தள்ளிப்போகிறது என்ற அர்த்தத்தில் பேசியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “தாணு, திடீர்னு சிம்புவிடம் பேசுறீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். அப்புறம் மீட் பண்ணி பேசினோம். சில மணிநேரத்திலேயே எல்லாமே கைகூடி வந்தது. அதனால் உடனே ஆரம்பித்துவிட்டோம். இந்த படம் வட சென்னை 2-வாக இருக்குமா என சொல்கிறார்கள். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வட சென்னை 2 கிடையாது. வட சென்னை 2 என்பது அன்புவின் எழுச்சி தான், அதில் எப்போதும் தனுஷ் தான் நடிப்பார். ஆனால் சிம்பு படம் வட சென்னை பட கதையில் இருந்து உருவாக்கப்படவுள்ளது. அதாவது வட சென்னை படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள், காலகட்டங்கள் மற்றும் இன்னும் சில விஷயங்கள் இதிலும் இருக்கும்” என்றார்.
பின்பு வட சென்னை பட காப்புரிமை விவகாரம் குறித்து பேசிய அவர், “தனுஷ் தான் வட சென்னை படத்தின் தயாரிப்பாளர். அதனால் அவரிடம் தான் படத்தின் உரிமை இருக்கும். அந்த படத்தை சம்பந்தப்படுத்தி நாம் எது எடுத்தாலும் அதற்கு அவரின் அனுமதி தேவை. அதற்காக அவர் பணம் கேட்பது எல்லா வகையிலும் சரியானது தான். அதை நெகட்டிவாகவோ, இல்லை வேறுமாதிரியாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் உண்மை என்னவென்றால், தனுஷிடம் வட சென்னையை மையப்படுத்தி இப்படி ஒரு கதை இருப்பதாக சொன்னவுடன் தடை இல்லா சான்றிதழ் வழங்க அவர் ஒப்புக்கொண்டார். பணம் எதுவும் தேவையில்லை எனக் கூறிவிட்டார். அவரிடம் சிம்பு படத்தை வட சென்னை படக் கதையை தொடர்புப்படுத்தியும் என்னால் எடுக்க முடியும் அது இல்லாமல் தனிப்படமாகவும் எடுக்க முடியும் என சொன்னேன். அதற்கு அவர் நீங்கள் எது பண்ணாலும் எனக்கு ஓ.கே. தான் என்றார்.
ஆனால் யூட்யூபில் இந்த விவகாரம் தொடர்பாக ஏதேதோ வீடியோ இருக்கிறது. அதன் தலைப்பை பார்த்தால் ரொம்பவும் மோசமாக என்னை காயம்படுத்தும் அளவுக்கு இருந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கும் தனுஷுக்கும் இடையில் இருக்கும் உறவு ஒரு படத்தால் மாறக்கூடிய ஒன்று அல்ல. சமீபத்தில் கூட எனக்கு ஒரு பண நெருக்கடி வந்த போது, ஒரு தயாரிப்பாளரிடம் பேசி எனக்கு ஒரு அட்வான்ஸ் வாங்கி கொடுக்க அவர் தான் உதவி செய்தார். சிம்புவுடன் படம் பண்ண போறேன் என சொன்னதும் உங்களுக்கும் சரி சிம்புவுக்கும் சரி இது புது அனுபவமாக இருக்கும் என சொன்னவர் தனுஷ். சிம்புவும் வட சென்னை காப்புரிமை தொடர்பான செய்திகளையெல்லாம் பார்த்துவிட்டு உங்களுக்கு எது சரியோ அதை செய்யுங்கள். உங்களுக்கும் தனுஷுக்கும் தொந்தரவு ஆகாத வகையில் எந்த முடிவெடுத்தாலும் எனக்கு ஓ.கே. தான் என்றார். அதனால் சிம்புவும் தனுஷும் ஒருவருக்கொருவர் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அதனால் சிம்பு படக் கதை குறித்தும் வட சென்னை படக் கதை குறித்தும் உலா வரும் ஊகங்கள் வெறும் ஊகங்களே தவிர வேறு எதுவும் கிடையாது” என்றார்.