/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/346_15.jpg)
1960 - 1970களில் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மனோஜ் குமார். இவரது குடும்பம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது டெல்லிக்கு வந்து குடியேறியது. அப்போது மனோஜுக்கு 10 வயது. பின்பு கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா மீது ஆர்வம் கொண்ட மனோஜ் முதலில் எழுத்தாளராக பல்வேறு ஸ்டூடியோக்களில் பணியாற்றியுள்ளார். பின்பு நடிகராக 1957 ஆம் ஆண்டு ‘ஃபேஷன் பிராண்ட்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர் ‘ஷஹீத்’, ‘பூரப் அவுர் பஸ்சிம்’, ‘க்ராந்தி’ உள்ளிட்ட தேசப் பக்தி படங்களில் நடித்து ‘பாரத் குமார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
1965 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மனோஜை ஒரு திரைப்படம் இயக்க கேட்டதாகக் ஒரு தகவல் உண்டு. பின்னர் 1967 ஆம் ஆண்டில், மனோஜ் ‘உப்கார்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இப்படத்தின் கதை இந்திய-பாகிஸ்தான் போரின் பின்னணியைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலீப் குமாரின் மிகப்பெரிய ரசிகராக இருந்த மனோஜ் குமார் 1949 ஆம் ஆண்டு திலீப் குமார், மனோஜ் குமார் என்ற கதாபாத்திரத்தில் ஷப்னம் படத்திற்கு பிறகு, அந்த பெயரையே தனது பெயராக மாற்றிக் கொண்டதாக பரவலாக நம்பப்படுகிறது. இவர் நடிப்பது இயக்குவது மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி 1992ஆம் பத்ம ஸ்ரீ விருதும் 2015ஆம் ஆண்டு ‘தாதா சாஹேப் பால்கே’ விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபகாலமாக உடல் நலக்குறைவால் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 87. இவரது மறைவு இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி உட்பட பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)